இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை அரசு ஆராய்ந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், "ஜாகீர் நாயக்கின் சர்ச்சை பேச்சுக்கள் குறித்து அரசு கவனம் கொண்டுள்ளது. அவரது பேச்சு அடங்கிய சிடிக்களை அரசு ஆராய்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்த அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்றார்.
ஜாகீர் நாயக்கும் சர்ச்சை பேச்சும்:
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டலில் கடந்த 1-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான 'அவாமி லீக்' தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ், இந்திய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தீவிரவாதத்துக்கு மாறி உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து நாயக்கின் பேச்சுகளை மேற்கோள்காட்டி பல கருத்துகளை முகநூலில் ரோஹன் வெளியிட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேஷனை நிறுவிய ஜாகீர் நாயக், தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக 'பீஸ் டிவி' என்ற சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சியில் நாயக் பேசுகையில், "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக மாற வேண்டும்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் குவிப்பு
மற்ற மதங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால், நாயக்கின் பவுண்டேஷனுக்கு இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும், மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தெற்கு மும்பையில் டோங்கிரி பகுதியில் உள்ள நாயக்கின் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்