இந்தியா

காங்கிரஸ் ஆட்சியால் முன்னணி மாநிலமாக திகழும் ராஜஸ்தான்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் ஆட்சியால் முன்னணி மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

“காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு மீது அடிப்படை ஆதாரமற்ற, மக்களை தவறாக வழி நடத்தக் கூடிய வகையிலான குற்றச்சாட்டுகளை பாஜக கூறி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியின் தலைவர்கள் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினார்கள்? இலவச சிகிச்சை வசதியை கொண்டு வந்தார்களா? வறுமையில் வாடும் மக்களுக்காக திட்டம் கொண்டு வந்தார்களா?

எங்கள் கட்சி ஆட்சி செய்த பணிகளையும், உங்கள் (பாஜக) கட்சி ஆட்சியின்போது மேற்கொண்ட பணிகளையும் நீங்களே (பாஜகவினர்) ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது. அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.

அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ராஜஸ்தான் மாநில அரசு முழுமையாகவும் நேர்மையாகவும் பயன்படுத்தியுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களை மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது.

விவசாயிகள், பெண்கள், பழங்குடியினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தா னில் வளர்ச்சிப் பணிகளை முதல்வர் அசோக் கெலோட் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

நாடு சுதந்திரமடைந்தபோது மிகவும் பின்தங்கியிருந்த ராஜஸ்தான் மாநிலம், காங்கிரஸ் அரசின் முயற்சியால் இப்போது சமூகப் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT