இந்தியா

குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்கை அகற்ற முடிவு: மே 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

பிடிஐ

இந்தியாவில் வி.ஐ.பி. கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கு அகற்றப்பட உள்ளது. இதுவரும் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீ தடுப்பு வாகனம் மற்றும் நீல வண்ண சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையி்ல் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிவப்பு விளக்கை அகற்றும் முடிவில் இருந்து விலக்கு அளிக்கப்பட வில்லை என்றார்.

கூட்டத்திற்குப் பின்னர், செய்தி யாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய தாவது:

மத்திய அமைச்சரவைக் கூட் டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலங்களில் அவசர தேவைக்காகச் செல்லும் வாகனங்களைத் தவிர பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆட்சி சாமானிய மக்களுக் கான அரசு என்பதை உணர்த்தும் வகையில், வி.ஐ.பி.க்களின் வாகனங்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் மற்றும் சைரன் ஒலிக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட தீர்மானித்தோம். இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும்.

இந்த முடிவைத் தொடர்ந்து, சட்டத்தில் தேவையான ஷரத்துக் களைச் சேர்க்க மத்திய நெடுஞ் சாலைத் துறை நடவடிக்கை எடுக்கும். அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தாமாக முன்வந்து அவர்களது காரில் உள்ள சிவப்பு விளக்கை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னோட்டமாக தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை அகற்ற கட்கரி உத்தரவிட்டதை அடுத்து, உடனடியாக அது அகற்றப் பட்டது. அதன்பின்னர், சிவப்பு விளக்கு அகற்றப்பட்ட காரில் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கார் களில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றும் முடிவை முதன்முறை யாக எடுத்தது. அதன்பிறகு, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அரசும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் அடுத்தடுத்து தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்தன.

SCROLL FOR NEXT