மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடல், டெல்லியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர் கள் இறுதி அஞ்சலி செலுத் தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலா ளரும், மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் (92), கடந்த 2-ம் தேதி இரவு காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலமான அஜய் பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ் பாப்பர், இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லெனின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பரதன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு பரதன் உடல் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு, டெல்லி நிகாம்போத் காட் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.