மக்களவைத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் அணுகுமுறை மிகவும் ஏமாற்றம் அளித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் தெரிவித்தார்.
சி.என்.என். - ஐ.பி.என். சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுகவுடனான இடதுசாரிகள் கூட்டணி முறிவு குறித்து கூறியது:
"தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அதிமுகதான் எங்களை முதலில் அழைத்தார்கள். தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்றார்கள். எனவே, எங்களுக்கு ஓர் இடம் வேண்டாம் என்று நன்றி சொல்லிவிட்டுத் திரும்பினோம்.
அவர்தான் (ஜெயலலிதா) என்னை அழைத்தாரே தவிர, நானாக அவரிடம் செல்லவில்லை. அவர்தான் கூட்டணியை செய்தியாளர்களிடம் அறிவித்தார்" என்றார்.
மூன்றாவது அணி முயற்சி தவறானது!
தேர்தலுக்கு முன்பு மூன்றாவது அணியை அமைக்க முயற்சி மேற்கொண்டது தவறானது என்ற பரதன், அது போன்ற ஒரு முயற்சியை தேர்தலுக்குப் பின் தான் எடுத்திருக்க வேண்டும் என்றார்.