இடதுசாரி தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தாங்களே தலைமையேற்று நடத்த வேண்டும். மத்திய ஆயுதமேந்திய போலீஸ் படையினர் மாநிலங்களுக்கு உதவுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் ஆயுதப்படைப் போலீஸாரும் பழங்குடியின மக்களின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்கப் பழக வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மேற்கொண்ட போது இதனை தெரிவித்தார். அதாவது மாநில அரசுகளே திட்டம் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர அனைத்து முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
“மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் பலியானது குறித்து நாடே கொந்தளித்துப் போயுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும் நம் நாடு, மாவோயிஸ்ட்கள் ஜனநாயத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றனர். எனவே ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. மாவொயிஸ்ட்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்க பாதுகாப்புப் படையினரை இலக்காக்கி தாக்குகின்றனர். எனவே இன்று நாம் ஒரு தாக்குதல் நடந்த பிறகு அதைப்பற்றி பேசப்போகிறோமோ அல்லது முன்னதாகவே தடுக்கப்போகிறோமா என்பது முக்கியம்.
பாதுகாப்புப் படையினரின் நிரந்தர முகாம்களில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் முக்கியம். பாதுகாப்புப் படையினர் முறையான நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஜிபிஎஸ் ட்ராக்கிங் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களையும் மாவோயிஸ்ட்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, தடுக்க நாம் பயன்படுத்துவது அவசியம்” என்றார் ராஜ்நாத் சிங்.