இந்தியா

தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை: சசிகலா சரணடைய அவகாசம் வழங்க முடியாது - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

இரா.வினோத்

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய 4 வார காலம் அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தீர்ப்பின்படி உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் அடங்கிய அமர்வு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை யும், தலா ரூ.10 கோடி அபராத மும் விதித்தது. மேலும் மூவரும் உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் சசிகலா, சுதாகரன் உள்ளிட்டோர் சரணடைய வில்லை. கட்சிப் பணி மற்றும் உடல்நலமில்லாத காரணத்தினால் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு 4 வார கால அவகாசம் கேட்டு சசிகலா உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதனால் சென்னை கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய செல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட சசிகலா தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்.

அதேசமயம் இந்த மனு விசாரணைக்கு ஏற்றக் கொள்ளப்பட்டதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திடம் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தீர்ப்பில் மாற்றமில்லை

இந்தச் சூழலில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி நேற்று காலை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வுமுன் ஆஜராகி சசிகலா தரப்பில் சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நினைவூட்டினார். அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி பினாகி சந்திரகோஷ், ‘‘இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. குற்றவாளிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்ப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு வார்த்தையை கூட மாற்ற முடியாது. மூத்த வழக்கறிஞரான உங்களுக்கு (கே.டி.எஸ். துள்சி) உடனடியாக சரணடைய வேண்டும் என்பதன் அர்த்தம் புரியும் என நினைக்கிறேன். எனவே தாமதிக்காமல் குற்றவாளிகள் மூவரும் சரணடைய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோர் ஒரு காரிலும், சுதாகரன் தனி காரிலும் நேற்று பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன்பின் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT