சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமற்றது என்ற குவஹாத்தி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் நவேந்திர குமார் தன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 1963-ல் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு மூலம் சிபிஐ உருவாக்கப்பட்டது, அந்த அமைப்புக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சகம் 1963 ஏப்ரல் 1-ல் நிறைவேற்றிய ஓர் தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை.
எனவே, சிபிஐ அமைப்பை போலீஸ் படையாகக் கருத முடியாது. அந்த அமைப்பு குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்டவிரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.
சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவஹாட்டி உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குவஹாத்தி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.