தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்வது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கர்நாடக முன்னாள் ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ். கர்நாடக ஆளுநராக 2009 முதல், 2014 வரை பதவி வகித்தார். தமிழகத்துக்கும் பலமுறை பொறுப்பு ஆளுநராக இருந்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் அளிக்க வேண்டும் என இருக்கும்போது, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு தபாலில் அனுப்புவது ஏற்புடையதா?
எம்.பி.க்களுக்கான சட்டதிட்டம் வேறு. மாநில அரசுகளுக்கான சட்டதிட்டம் வேறு. ஆளுநருக்கு தரப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரங்களை சில விஷயங்களில் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி செயல்படுத்தலாம். பன்னீரின் ராஜினாமா ஏற்கப்பட்ட விதத்தில் எந்தக் குறையும் கூற முடியாது.
ராஜினாமா கடிதம் அளித்த 2 நாட்களில், அக்கடிதம் தன்னை கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக பன்னீர் கூறுவதால் அதை வாபஸ் பெற சட்டத்தில் இடமுள்ளதா?
பன்னீர் விஷயத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. இவரது ராஜினாமாவை ஏற்று, ஆளுநர் அதை அறிக்கையாகவும் வெளியிட்டுவிட்டால் அது, அரசிதழில் வெளியிடப்பட்டு விடும். இதை மாற்ற எவருக்கும் உரிமை இல்லை. ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும் அது ஏற்கப்பட வாய்ப்பு இல்லை.
ஆட்சி அமைக்க உரிமை கோரி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை ஒருவர் கொடுத்த பின், புதிய அரசு பதவியேற்பை ஆளுநர் தாமதம் செய்யலாமா?
இவ்வாறு தாமதம் செய்வது சரியல்ல. இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். கட்சி உடைவதற்கு வாய்ப்பு அளித்ததாகிவிடும். பன்னீரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது போல் புதிய முதல்வர் தேர்வையும் ஆளுநர் நேரில் வராமலே ஏற்றுக்கொண்டு உத்தரவிடலாம். வேறு மாநிலத்தின் ஆளுநர் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக இப்பதால் இவ்வாறு செய்யலாம்.
ஆளுநர் சட்ட ஆலோசனை பெறுவதற்காக தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறதே..
இதில் சட்ட ஆலோசனை பெற ஒன்றுமே இல்லை. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆளும்கட்சியில் இருந்து முதல்வர் மாற்றப்படுவதாக அதன் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து கடிதம் அளித்தாலே போதுமானது. இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, உடனே பதவியேற்பை நடத்தி வைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதே முறையானது. ஆதரவு எம்எல்ஏக்களை ஆளுநர் முன் நிறுத்தத் தேவையில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை எனில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருக்க விரும்புவதாகக் கூறப்படுவது குறித்து?
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஆளுநர் மாளிகையிலா நடந்து வருகிறது? நீதிமன்றம் தனது பணியை செய்வது போல், ஆளுநரும் பணியாற்ற வேண்டும். தீர்ப்புக்கு பிறகு சசிகலா பதவி விலக வேண்டியிருந்தால் அவ்வாறு நிகழட்டும்.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசின் மீது புகார் எழுந்துள்ளதே?
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நான் ஆளுநராக பணியாற்றி யவன் என்ற முறையில் இதற்கு கருத்து கூற விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்வதை எதிர்த்து நீதிமன்றத் தில் வழக்கு தொடர முடியுமா?
ஆளுநரின் பல முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. அதில் இதுவும் ஒன்றாகும்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளதா?
இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் அளிக்கும் அறிக் கையில், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான தேவையை முறை யாக வலியுறுத்த வேண்டும். இதனை மத்திய அமைச்சரவை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பிறகு இதை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண் டும். ஆனால் தமிழகத்தில் அதற் கான தேவை சிறிதும் இல்லை. அவ்வாறு செய்தால் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக முடியும்.