இந்தியா

நாட்டின் எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

ஐஏஎன்எஸ்

நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளும் சீல் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள டேக்னாபூரில் எல்லை பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நாட்டின் எல்லைகளை முறையாக பாதுகாக்கும் பொறுப்பை எல்லை பாதுகாப்புப் படை சிறப்பாக செய்து வருகிறது. இதன் காரணமாகவே எல்லை பாதுகாப்புப் படை மீதான நம்பிக்கை மக்களிடையே அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் எங்கெல்லாம் கம்பி வேலிகள் அமைக்க முடியுமோ அங்கெல்லாம் வேலிகள் அமைத்து சீல் வைக்கப்படும். வேலிகள் அமைக்க முடியாத எல்லைப் பகுதிகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

நக்சல் தீவிரவாதம் கடந்த 3 ஆண்டுகளில் 50 முதல் 55 சதவீதம் வரை குறைந்துள்ளது. முன்பு 135 மாவட்டங்கள் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை 35 மாவட்டங்களாக குறைந்துள்ளன. நக்சல் பிரச்சினைகளுக்கு மாநில அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது'' என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

SCROLL FOR NEXT