சர்வதேச எல்லைப் பகுதியான அட்டாரி/வாகா பகுதியில் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இனிப்புகளை பரிமாறி தீபாவளி நன்னாளை கொண்டாடினர். எல்லைப் பாதுகாப்புப் படையின் பொறுப்பு டி.ஐ.ஜி டெபி ஜோசப், பிற அதிகாரிகள், வீரர்களுடன் சென்று பாகிஸ்தான் தரப்பு படை வீரர்களுக்கு பலதரப்பட்ட இனிப்பு வகைகளை தீபாவளி அன்பளிப்பாக வழங்கினார். பாகிஸ்தான் எல்லை வீரர்களும் அவரது தளபதி முகமது அஷீர் கான் தலைமையில் தம் நாட்டில் தயாரான பல்வகை இனிப்புகளை இந்திய வீரர்களுக்கு வழங்கினர். தீபாவளி கொண்டாட்டம் காரணமாக சர்வதேச எல்லையான அட்டாரி/வாகாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு இல்லாத சூழல் காணப்பட்டது.