இந்தியா

வங்கிக்கு பூட்டு போட மறந்த ஊழியர்கள்: கைவிலங்கு போட்டு பாதுகாத்த போலீஸார்

செய்திப்பிரிவு

வீட்டுக்கோ, வாகனத்துக்கோ பூட்டு போட மறப்பது சகஜம். ஆனால் வங்கிக்கே பூட்டு போட மறந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இது குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்ததால், போலீஸார் அந்த வங்கியின் கதவுக்கு கைவிலங்கு போட்டு இரவு முழுவதும் பாதுகாத்தனர்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம், யாடிகி என்ற ஊரில் சிண்டிகேட் வங்கிக் கிளை உள்ளது. இதில் விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகை, பத்திரங்களைப் பாதுகாத்து வைக்கும் பாதுகாப்பு பெட்டக வசதியும் இங்குள்ளது.

இந்த வங்கிக் கிளை நேற்று முன்தினம் திங்கள்கிழமை வழக் கம் போல் செயல்பட்டது. இந்நிலை யில் இரவு சுமார் 8 மணிக்கு வங்கியின் கதவு திறந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். யாராவது வங்கியை கொள்ளை அடிக்கின்றனரா என அஞ்சி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸாரும் பதற்றத்துடன் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு வங்கி யின் இரு கதவுகளும் திறக்கப் பட்டிருந்ததால் உள்ளே கொள் ளையர்கள் இருக்கலாம் என்று கருதிய போலீஸார், துப்பாக்கி களுடன் மெதுவாக உள்ளே சென்றனர். ஆனால் வங்கியில் யாரும் இல்லை. இதையடுத்து வங்கிக்கு ஊழியர்கள் பூட்டுபோட மறந்தது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அந்த வங்கியின் கதவுக்கு தங்களிடம் உள்ள கைவிலங்கால் பூட்டு போட்டு இரவு முழுவதும் பாதுகாத்தனர்.

SCROLL FOR NEXT