உத்தரப் பிரதேச அமைச்சர் காயத்ரி பிரசாத் பிரஜாபதி. இவர் மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரஜாபதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பிரஜாபதி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜாபதியை இன்னும் ஏன் அமைச்சரவையில் வைத்துள்ளீர்கள் என்று விளக்கம் கேட்டு முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநர் ராம் நாயக் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் நீடிப்பது சட்ட ரீதியாக ஒழுக்கம், மதிப்பு குறித்து கேள்வி எழுகிறது. எனவே, அவர் அமைச்சரவையில் நீடிப்பதை நீங்கள் நியாயப்படுத்துவதற்கான காரணம் குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் கடிதத்தில் கூறியுள்ளார்.