இந்தியா

டெல்லியில் மீண்டும் தேர்தல் நடத்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

டெல்லியில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் எனக் குடியரசுத் தலைவர் அனுமதி அளித்ததை எதிர்க்கும் வகையில் அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன் னாள் அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறியபோது, ‘டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கும் முடிவை துணைநிலை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக குதிரை பேரம் செய்ய பாஜக முயற்சிக்கும். இது போன்ற அரசு டெல்லியில் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை என்ன?’ எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸின் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சரு மான ஷகீல் அகமது கூறிய போது, ‘டெல்லியில் தேர்தல் அறிவிக்காமல் குதிரை பேரம் செய்ய வழி வகுக்கும் வகையில் ஐந்து மாதங்கள் காலம் தாழ்த்தி பாஜகவுக்கு விடுக்கும் அழைப்பு தவறானது. துணைநிலை ஆளுநர், தம் எஜமானர்களான மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது குழுவினரின் உத்தரவுக்கு இணங்கியுள்ளார்.’ எனத் தெரிவித்தார்.

டெல்லியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அர்விந்த்சிங் லவ்லி கூறியபோது, அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது முதலாகவே மறுபடியும் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT