இந்தியா

சசிகலாவுடன் ஜெயலலிதா பேசுவதில்லை: பாதுகாப்பு அதிகாரி ககன் தீப் பேட்டி

இரா.வினோத்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலையும் மாலையும் மைசூர் சாமூண்டீஸ்வரியை வணங்குவதாகவும், சசிகலா உள்ளிட்ட யாருடனும் அவர் பேசுவதில்லை எனவும் அவரது பாதுகாப்பு அதிகாரி ககன் தீப் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்தும், அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி ககன் தீப்பை சந்தித்து பேசினோம். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன். தினமும் 3 முறை அவரது உடல்நிலையை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல சிறை மருத்துவர் விஜய குமாரும் அவரது குடும்ப மருத்துவர் சாந்தராமனும் பரிந்துரைக்கும் உணவுகள் வழங்கப்படுகின்றன.

சிறைக்கு வந்த சில நாட்கள் ஜெயலலிதா காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆனால் இப்போது அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வதில்லை. பெரும்பாலான நேரத்தை செய்தித்தாள் வாசிப்பதற்காக பயன்படுத்துகிறார். அவருக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சிறைக்காவலர்களிடம்கூட எந்த உதவியும் கேட்பதில்லை. பெரும்பாலும் தனிமையில் இருக்கிறார்.

தன்னை பரிசோதிக்க வரும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் கன்னடத்தில் பேசுகிறார். சில நேரங்களில் அவரை நலம் விசாரிக்கும் சக கைதிகளிடம் பேசுகிறார். சசிகலா, சுதாகரன், இளவரசியுடன் பேசுவதில்லை. ஒருவேளை நான் பார்க்காத நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருடைய சிறைக்காவலர் திவ்யாஸ்ரீ யிடம், தசரா திருவிழாவைப் பற்றி பேசி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனக்கு மைசூர் சாமூண்டீஸ்வரி படம் வேண்டுமென கேட்டுள்ளார். எனவே உடனடியாக அவருக்கு சாமூண்டீஸ்வரி படம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை காலையும் மாலையும் அவர் சாமூண்டீஸ்வரியை வணங்கியதாக எனக்கு தகவல் கிடைத்தது என அவர் தெரிவித்தார்.​

SCROLL FOR NEXT