தன்னிடம் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக, தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா மாநில போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகாரை தானாகவே முன்வந்து கையில் எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்.
இது குறித்து ஆணையத்தின், உறுப்பினர் நிர்மலாசமந்த் பிரபாவால்கர் கூறுகையில்: தருண் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிய வலியுறுத்தி கோவா போலீசுக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். தேசிய மகளிர் ஆணையத்தின், கோவா மாநில பொறுப்பாளர் ஷமினா ஷாஃபிக் தெஹல்கா நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரியுடன் இன்று பேசுகிறார் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுடனும் பேசுவார்.
அந்தப் பெண் அனுப்பியுள்ள இமெயில்களை படித்ததன் மூலம் அவருக்கு நடந்த அநீதி தெரிகிறது. மேலும் இவ்விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்ற அவர் விரும்புவதையும் உணர முடிகிறது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூவுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக நிர்மலாசமந்த் பிரபாவால்கர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நவம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை கோவாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலில், ‘யோசனை விழா’ என்ற பெயரில் தெஹல்கா நடத்திய கூட்டத்தின்போது நடந்துள்ளது. எனவே, கோவாவின் காவல்துறை கண்காணிப்பாளரான பிரியங்கா, சம்பவம் நடந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு கடிதம் எழுதி கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை கேட்டிருக்கிறார்.
இது சம்பவத்திற்கான முக்கிய சாட்சியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் சம்மந்தப்பட்ட வர்களால் பறிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்களையும் கோவா போலீஸ் ஆராய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.