இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது மக்களவை

செய்திப்பிரிவு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் கைது விவகாரம், பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி பதவி விலகும் கோரிக்கை, தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு என மக்களவையில் உறுப்பினர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவை இன்று காலை கூடிய உடன், விலைவாசி உயர்வு, தனித் தெலங்கான உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்களும், தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்களும் தெலங்கானாவுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடிய போது, நீதிபதி கங்குலி விவகாரத்தை முன்வைத்து திரிணாமூல் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பி.க்கள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெகன் மோகன் ரெட்டி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டார். இதனால், மக்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக மீரா குமார் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் இன்னும் 3 தினங்களில் முடிவடையும் நிலையில், மக்களவையில் முக்கிய அலுவல்கள் ஏதும் முடிக்கப் பெறவில்லை.

லோக்பால் மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்ட நிலையில், நாளை மக்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெறும் என மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT