இந்தியா

டார்ஜிலிங் போராட்டம்: ஜிஜேஎம் தலைவர் வீட்டில் சோதனை, ஆயுதங்கள் பறிமுதல்

ஷிவ் சகாய் சிங்

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் ஜிஜேஎம் கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் அதன் தலைவர் பிமல் குருங் வீட்டில் இன்று(வியாழக்கிழமை) சோதனை நடத்தப்பட்டது.

அப்போது பிமல் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் கூர்மையான ஆயுதங்கள், கத்திகள், வில், அம்புகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பிமல் வீட்டின் முதன்மைக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த காவல்துறையினர் மேற்கூறிய பொருட்களை மீட்டுள்ளனர். சோதனை நடைபெற்றபோது பிமல் வீட்டில் இல்லை.

இதுகுறித்து கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் கூறும்போது, ''நாங்கள் பழங்குடியினர். எங்களிடம் பாரம்பரிய வில்வித்தை போட்டிகளுக்கான அனைத்து உபகரணங்களும் இருக்கும். எங்களின் உரிமை, கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் மதிக்கப்படுவதில்லை. இதனால்தான் தனி நாடு கேட்கிறோம்'' என்றனர்.

ஜிஜேஎம் தலைவர் வீட்டுக்கு வரும் உள்ளூர்க்காரர்களைத் தடுத்து நிறுத்தும் போலீஸார்.

தனி மாநில கோரிக்கை

மேற்குவங்க மாநிலத்தில் மலைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஜிஜேஎம் அமைப்பினர் மாநில அரசைக் கண்டித்தும், மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜிஜேஎம் அழைப்பு விடுத்தது.

அரசு அலுவலகங்கள் இயக்கம்

இதைத் தொடர்ந்து டார்ஜிலிங் பகுதியில் பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. எனினும் அரசு அலுவலகங்கள் இயங்கின. இதனால் ஜிஜேஎம் ஆதரவாளர்கள் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, பணிக்குச் செல்லும் ஊழியர்களை தடுக்க முயன்றனர்.

முன்னெச்சரிக்கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் ஜிஜேஎம் ஆதரவாளர்ளை விரட்டியடித்தனர். அப்போது ஆவேசமடைந்த சிலர் போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் முழு அடைப்பு காரணமாக டார்ஜிலிங்கில் உள்ள சவுக்பஜார் மற்றும் மால் சாலையில் இருந்த பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸாரும் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT