இந்தியா

ரயில்வே வாரிய உறுப்பினர் பதவிக்கு ரூ.10 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சரின் உறவினர் மீது குற்றச்சாட்டு பதிவு

செய்திப்பிரிவு

ரயில்வே வாரிய உறுப்பினர் பதவிக்கு ரூ.10 கோடி லஞ்சம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பவன்குமார் பன்சால் உறவினர் விஜய் சிங்லா உள்ளிட்ட 10 பேர் மீது செவ்வாய்க்கிழமை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டது. இனி இவர்கள் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

லஞ்ச தடுப்புச் சட்ட விதிகளின்படி இந்த பத்து பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த ஷர்மா குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்வது ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

தாங்கள் குற்றம் இழைக்கவில்லை என்றும் வழக்கு விசாரணைக்கு தயார் என்றும் 10 பேரும் தெரிவித்தனர்.

ரயில்வே வாரிய உறுப்பினர் பதவி நியமனத்தில் லஞ்சம் கைமாறிய விவகாரம் அம்பலமானதும், சர்ச்சை எழவே ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து காங்கிரஸ் தலைவர் பவன்குமார் பன்சால் கடந்த ஆண்டு மே மாதம் விலகினார். கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அரசு தரப்பு சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘மகேஷ் குமாரை ரயில்வே வாரிய உறுப்பினராக நியமிக்க அரசு சேவையில் உள்ள ஒருவரிடம் தனது செல்வாக்கை பயன்படுத்துவதற்கு ஈடாக உங்களுக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ மகேஷ் குமார், சி.வி. வேணுகோபால் உள்ளிட்ட நபர்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.89 லட்சத்து 68 ஆயிரத்தை ஜனவரி 2103க்கும் மே 3 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் (சிங்லா) பெற்றிருக்கிறீர்கள். இது லஞ்சத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றமாகும்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள், மகேஷ்குமாரை ரயில்வே வாரிய (மின்பிரிவு) உறுப்பினராக நியமித்திட சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஈடாக சிங்லாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக ரூ.10 கோடி வழங்கஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எங்களிடம் உள்ள ஆவணங்கள்படி உடனடியாக வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.2 கோடி என தெரிகிறது. அந்த பணத்தை குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபர் மூலமாக ஏற்பாடு செய்யும்படி மஞ்சுநாத்துக்கு குமார் உத்தரவிட்டிருக்கிறார்.

பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள நீங்கள் (குமார்) ஜனவரி 2013க்கும் மே 3 2013க்கும்இடைப்பட்ட காலத்தில் ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டு அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நபரிடம் இருந்து ஒரு பகுதி தொகையை வாங்கி இருக்கிறீர்கள் என்று நீதிபதி தெரிவித்தார்.

நீங்கள் (மகேஷ் குமார்) உங்கள் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, மஞ்சுநாத், ராகுல் யாதவ், சமீர் சந்திர்,

சுஷில் டாகா, சி.வி.வேணுகோபால், முரளி கிருஷ்ணா ஆகியோரிடமிருந்து ரூ.89,68,000 ஆதாயம் அடைந்திருக்

கிறீர்கள். இந்த பணம் உங்கள் சார்பில் சண்டீகரில் விஜய் சிங்லா, சந்தீப் கோயல் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT