கேரள முன்னாள் அமைச்சர் கே.பாபுவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
கேரளத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான, முந்தைய காங்கி ரஸ் கூட்டணி அரசில் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் கே.பாபு. மதுபானக்கூட ஊழல் குற்றச்சாட்டில் இவர் மீது வழக்கு பதிவு செய்ய திருச்சூர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் இவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் திருப்பூணித்துறையில் உள்ள அவரது வீடு, எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அவரது இரு மகள்களின் வீடுகள், எர்ணாகுளம் மாவட்டத்தில் பாபுராம், மோகனம் என்ற அவரது இரு நண்பர்களின் வீடுகள் ஆகியவற்றில் நேற்று சோதனை நடைபெற்றது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 2 டிஎஸ்பி.க்கள் தலைமையில் 5 குழுக்கள் நேற்று காலை 8 மணிக்கு சோதனையை தொடங்கின.
“திருப்பூணித்துறையில் இருந்து செயல்படும் ஊழலுக்கு எதிராக அமைப்பு அளித்த புகாரின் அடிப் படையில் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சோதனை நடத்தப்பட்டது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளத்தில் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் திருப்பூணித்துறை தொகுதியில் போட்டியிட்ட பாபு, மார்க்சிஸ்ட் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.