இந்தியா

ராஜஸ்தான் அல்வார் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவரை பகத்சிங்குடன் ஒப்பிட்ட சாத்வி

பிடிஐ

கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசுப்பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட விபின் யாதவ் என்பவரை பகத் சிங், சந்திர சேகர் ஆசாத் உள்ளிட்ட புரட்சியாளர்களுடன் ஒப்பிட்டுள்ளார் பசுப்பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சாத்வி கமல்.

கைது செய்யப்பட்ட விபின் யாதவ்வை சாத்வி சந்தித்த வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சாத்வி, விபின் யாதவ்விடம், “நாடு முழுதும் உன் பின்னால் உள்ளது. நம் நாட்டில் இத்தகைய செயல்களை நாம் செய்யாவிடில் வேறு யார் செய்வார்கள்? நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” என்று பேசியது தெரியவந்தது.

மேலும், “பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுக்தேவ் போன்றவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை” என்றதோடு விபின் யாதவ்விடம், “உங்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?” என்று வினவியுள்ளார்.

யாதவ் பதிலளிக்கத் தயங்கிய போது, சாத்வி, “கவலைப்படாதீர்கள். நீங்கள் பயந்து போயுள்ளீர்கள் போல் தெரிகிறது” என்றார் அதற்கு யாதவ், “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

மேலும் சிறையில் யாதவ் சும்மாயில்லாமல் பசுக்களைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யும் செய்தியை பரப்புங்கள் என்று அறிவுறுத்தினார் சாத்வி.

இது குறித்து சாத்வியிடம் கேட்ட போது, சந்திப்பை ஒப்புக் கொண்டு, அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததாகக் கூறினார்.

கடந்த மாதம் ஜெய்பூர் விடுதி ஒன்றில் பசு இறைச்சி விருந்து நடப்பதாக எழுந்த வதந்தியை நம்பி சாத்வி மற்றும் இவரது ஆட்கள் விடுதியை முற்றுகையிட்டு முடக்கியதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT