கடலூர் மாவட்டம், விருத்தாச் சலத்தை சேர்ந்த சங்கர் - கஸ்தூரி தம்பதியரின் மகள் கீதாலட்சுமி (9). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். இவர் பெங்களூரில் உள்ள தனது அத்தை தனலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாலை சிறுமியை பன்னார் கட்டா சாலையில் உள்ள பீளக ஹள்ளி கடை வீதிக்கு தனலட்சுமி அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது நடைபாதையில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் கீதா தவறி விழுந்துள்ளார். சாக்கடை கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சிறுமி அதில் அடித்துச் செல்லப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் சாக்கடையில் இறங்கி சிறுமியை தேடினர். இரவு முழுவதும் தேடியும் சிறுமியை மீட்க முடியவில்லை.
மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் என 150 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும் கடந்த 2 நாட்களாக சிறுமியை மீட்க முடியாமல் திணறினர். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மடிவாளா ஏரியில் சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப் பட்டது.