தொலைக்காட்சி சேனல்கள் அனைத்துக்கும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு. ஒரு விஷயத்தைப் பற்றிய உண்மை என்னவென்பதையே அறியாமல், ஊகத்தின் அடிப்படையில் மேலும் மேலும் அது தொடர்பான செய்திகளை குவித்துக் கொண்டி ருப்பதில் அவை ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
அதே போன்றுதான் கடந்த செவ்வாய்க்கிழமையும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கி ரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் மோதல் என்று ஓயாமல் பேசிக் கொண்டிருந்தன தொலைக்காட்சி சேனல்கள். ஆனால், புதன்கிழமை அந்தப் பிரச்சினைக்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. ஏற்கெனவே, மன்மோகன் சிங் மீது முழு நம்பிக்கையுள்ளதாக சோனியா காந்தி அறிவித்துவிட்ட நிலையில், சேனல்களின் வாயை மூடுவதற்காகத்தான் பிரதமருட னான ராகுலின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.
சேனல்கள் ஒன்றை மறந்து விட்டன. இயல்பிலேயே மன்மோகன் சிங்கும் சரி, ராகுலும் சரி, ஆக்ரோஷமான குணம் படைத்தவர்கள் அல்ல. இருவருக்குமான ஒரே ஒற்றுமை இது ஒன்றுதான்.
இருவருக்கும் இடையே சில வேற்றுமைகளும் உள்ளன. அவை: பிரதமர் மிகப்பெரிய படிப்பாளி. ஆனால் ராகுல் அப்படியல்ல. மத்திய அரசில் பல்வேறு பதவிகளை மன்மோகன் வகித்திருக்கிறார். ராகுல் எந்தப் பொறுப்பையும் வகித்தது இல்லை. கடின உழைப்பாளி, பொறுப்புடன் காரியங்களை கவனிக்கக் கூடியவர் என்ற பெயர் மன்மோகனுக்கு உண்டு. அந்த அளவுக்கு ராகுலின் செயல்பாடு இருந்ததில்லை. இப்படி, இந்த பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இப்போதைக்கு இருதரப்புக்கும் இடையேயான முக்கியமான வித்தியாசங்கள் இவைதான்.