நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து, தெலங்கானா பகுதியில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அதே நேரத்தில் சீமாந்திரா பகுதியில் கடும் எதிர்ப்பும் ஆர்ப் பாட்டமும் நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தை அமைத்து சாதித்து விட்டோம் என்று கூறி அப்பகுதியில் உள்ள காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக அலுவலகங்கள் முன்பு, தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, வண்ண பொடிகளைத் தூவிக் கொண்டாடினர்.
சீமாந்திரா மாவட்டங்களில் இதே கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை சீமாந்திரா மாவட்டங்களில் பந்த் நடத்த தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொது செயலாளர் ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரித்து மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க துணை ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறுசீரமைப்பு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து, சீமாந்திரா பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்கள், அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் வீடு, அலுவலகங்கள் முன்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு சீமாந்திரா பகுதிகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.