இந்தியா

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

செய்திப்பிரிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் (வியாழக்கிழமை) தாக்குதல் நடத்தியது.

எனினும், இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் உயிர்ச்சேதமோ, காயாமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி கூறுகையில், “சம்பா மாவட்டம் ராம்கர் மற்றும் ஜம்மு மாவட்டம் நிக்கி தவி ஆகிய பகுதிகளில் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கனரக ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் இன்று அதிகாலை 2,30 மணி வரை நீடித்தது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது” என்றார்.

இருதரப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த ஆண்டு தொடக்கம் முதல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், சம்பா மற்றும் அக்னூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக்கருகே உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பது கவனத்துக்குரியது.

SCROLL FOR NEXT