இந்தியா

போபால் விஷவாயுக் கசிவு நினைவு நாளில் நீதி கேட்டு போராட்டம்

செய்திப்பிரிவு

போபால் விஷவாயுக் கசிவு துயரத் தின் 29ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், 1984ம் ஆண்டு டிசம்பர் 2, 3 தேதிகள் சந்திக்கும் நள்ளிரவில் யூனியன் கார்பைடு என்ற ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த னர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். உலகத்தை உலுக்கிய இத்துயர சம்பவத்தின் நினைவு நாள் போபாலில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

போபால் காஸ் பீடிட் மகிளா உத்யோக் சங்கதன் என்ற அமைப்பு சார்பில் இங்குள்ள யாத்கார் இ- ஷாஜகானி பூங்காவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கதன் அமைப்பாளர் அப்துல் ஜப்பார் பேசுகையில், “விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளோம். மேலும் போபால் நகருக்கு ஏற் பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுவோம். பாதிக்கப்பட்டவர் களுக்கான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளில், முறை கேடுகள் தொடர்பான குற்றச்சாட்டு களை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

பேரழிவை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் சிறைக்கு அனுப்பப்படவில்லை. போபால் மாவட்ட நீதிமன்றம் 2010ம் ஆண்டு, ஜூன் 7ம் தேதி அளித்த தீர்ப்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதித்தது. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் ஜாமீனில் வந்துவிட்டனர்” என்றார்.

பொதுக் கூட்டத்தை தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதுபோல் மூடப்பட்டுள்ள யூனியன் கார்பைடு ஆலை முன் மற்றொரு அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆண்டர்சனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ளச் செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுபோல் நகரின் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT