இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஜெயலலிதாவுடன் வழக்கறிஞர்கள் ஆலோசனை - தீர்ப்பு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட வாய்ப்பு?

இரா.வினோத்

சொத்துக்குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய‌ அடுத்தகட்ட நகர்வுகள், உடனடியாக ஜாமீன் பெறுவதற்கு வழி என்ன என்பன குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும், ஜாமீன் வழங்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக ஆலோசிக்க சிறைக்கு வருமாறு அவருடைய வழக்கறிஞர்களுக்கு சிறை அதிகாரிகள் மூலம் அன்று மாலையே ஜெயலலிதா தகவல் அனுப்பினார். நீதிமன்ற பணிகள் முடிவடைவதற்குள் இரவாகி விட்டதால், நேற்று சந்திப்பு நடக்கும் எனக் கூறப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தன‌க்கு உச்ச நீதிமன்ற வேலை இருக்கிறது எனக்கூறி நேற்று முன்தினம் இரவே டெல்லிக்கு கிளம்பினார்.

சிறையில் ஆலோசனை

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், அசோகன் ஆகியோர் சிறைக்கு வந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் வ‌ட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:

சிறையில் இருக்கும் உயரதிகாரி ஒருவரின் அறையில் ஜெயலலிதா தனது வழக்கறிஞர்களை சந்தித்தார். அப்போது வழக்கு குறித்து ஜெயலலிதா சில நிமிடங்கள் நவநீதகிருஷ்ணனுடன் கோபமாக பேசினார். இந்த வழக்கில் வழக்கறிஞர்களுடைய செயல்பாடுகள் துளியும் திருப்திகரமாக இல்லை என்றும், எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டதாக கடிந்துகொண்டார்.

அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும், உடனடியாக ஜாமீன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தார். அதனைத் தொடர்ந்து மேல் முறையீட்டு மனுக்களில் கையெழுத்திட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர். நீண்ட நாட் களுக்கு பிறகு சிறையில் ஜெயலலி தாவை சந்தித்த அவருடைய வழக்கறி ஞர்கள் கவலையான முகத்துடன் வெளியேறினர்.

தாமதமாக வாய்ப்பு?

ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து மனுக்களை நிராகரித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின் அசல் படிவங்கள் உடனடியாக வழக்கறிஞருக்கு வழங்கப்படவில்லை. கர்நாடகத்தில் புதன்கிழமை வால்மீகி ஜெயந்தி என்பதால் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் புதன்கிழமையும் தீர்ப்பின் அசல் படிவங்கள் கிடைக்காததால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாமல் திணறினர்.

இந்நிலையில் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரின் கையெழுத்து மற்றும் முத்திரையிட்ட தீர்ப்பின் அசல் படிவங்கள் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தான் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதுவரை காத்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் மனு விசாரணை தாமதமாக வாய்ப்பு இருக்கிறது.

எனவே அவருடைய வழக்கறிஞர்கள் தங்களிடம் இருக்கும் தீர்ப்பு நகலை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் வருகிற 27-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.

SCROLL FOR NEXT