கேரளாவில் புதிய மதுபான கொள்கை வகுக்கப்படும் முன், அது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 2014-ல் மது கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அதன் படி ஐந்து நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் மதுபானங் கள் விற்கவோ, வழங்கவோ தடை செய்யப்பட்டது. மேலும் 700க்கும் மேற்பட்ட மதுபான பார்களும் மூடப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் கேரளாவில் கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப் பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்த புதிதாக தலைமை யேற்றுள்ள இடதுசாரி அரசு முடிவெடுத்துள்ளது.
புதிய அரசின் சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் உரை யுடன் தொடங்கியது. அப்போது மதுபான கொள்கை குறித்தும் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் பி.சதாசிவம் உரையாற்றியதாவது:
மதுபானங்களை முழுமையாக தடை செய்யும் முடிவுக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்து வருகின்றன. இதனால் மதுபானங்கள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. எனவே இது தொடர்பான புதிய கொள்கை வகுக்கப்படும் முன், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்படும். மது மற்றும் போதை பொருட்கள் உட்கொள்வதை நிறுத்த வகை செய்யும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு வலுப்படுத்தவுள்ளது. மது பழக்கத்தை கைவிட மாவட்டங்கள் தோறும் மறுவாழ்வு மையங்கள் திறக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் பி.சதாசிவம் உரையாற்றினார்.