இந்தியா

தெற்கு சூடான் உள்நாட்டு போரில் இந்தியர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் போரட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சையத் ஃபருக் பாஷா என்பது தெரியவந்துள்ளது. சனிக்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது.

கொலை சம்பவமானது தெற்கு சூடானின் தலைநகரான ஜுபாவிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் நடந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில், "கடந்த சனிக்கிழமை தெற்கு சூடானிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியான அபியீ பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது போராட்டக்கரார்களால் சையத் ஃபருக் பாஷா சுடப்பட்டுள்ளார். இதில் அவரது ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. தெற்கு சூடானில் கடந்த ஆண்டு துவங்கிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட முதல் இந்தியர் சையத் ஆவார்" என்று கூறப்பட்டுள்ளது.

சையத் ஃபருக் பாஷாவின் மரணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் சையத் ஃபருக் பாஷாவின் குடும்பத்தினருடன் பேசியுள்ளோம். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியும் அளித்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சையத் ஃபருக் பாஷாவின் குடும்பத்தார் ’தி இந்து’ ஆங்கிலத்திடம் கூறும்போது, "தெற்கு சூடானில் இருப்பதற்கான ஆபத்துகளை சையத் அறிந்திருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக அதனை எதிர்கொண்டு வந்தார். இந்தச் சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது" என்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு தெற்கு சூடானில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக 'ஆபரேஷன் சங்கட் மோச்சான்' என்ற பெயரில் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் நேரடி கவனிப்பில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக சி-17 விமானம் மூலம் 156 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இருப்பினும் சில மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இங்குதான் உள்ளது என்று கூறி இந்தியா வர மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT