குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது, அவரை எவ்வாறு வெற்றி பெறச் செய்வது என்பது குறித்து பாஜக கூட்டணியும் காங் கிரஸ் கூட்டணியும் பல்வேறு வியூ கங்களை வகுத்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதேநேரம் பாஜக தரப்பில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கடந்த 16-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர்.
இந்தப் பின்னணியில் பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக நாளை அல்லது நாளை மறுநாள் பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் வரும் 23-ம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.