இந்தியா

சாதித்துக் காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்

செய்திப்பிரிவு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற பின் அங்கு மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. இதை ஒரு பொருட்டாக ஏற்க மறுத்த காங்கிரஸ் மற்றும் பாஜக இதைப் பார்த்து பயப்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் இந்திய வருவாய் துறையின் உயர் பதவியில் இருந்தவர். உபி மாநிலம் காஜியா பாத்தில் பணியாற்றினார்.

லோக்பால் மசோதாவை அமல்படுத்த வேண்டி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹசாரேவுடன் நெருக்கமாகப் பணியாற்றினார். இதற்காக தம் பதவியில் இருந்து கட்டாய ஓய்வு பெற்றவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பல ஊழல்களை வெளிப்படுத்தினார். அதனால் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சியைத் தொடங்க எண்ணியவருக்கு அண்ணா ஹசாரே அனுமதிக்கவில்லை.

இதனால், அவருடன் இருந்து விலகி ஆம் ஆத்மி எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கி முதன் முறையாகத் தேர்தலை டெல்லியில் சந்தித்தார் கெஜ்ரிவால். இவருக்கு துவக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த அண்ணா ஹசாரே தற்போது வாழ்த்து கூறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கெஜ்ரிவால் டெல்லியின் முதல் அமைச்சர் ஷீலாவுக்கு மட்டும் எதிரி என்பது போல் கருதப்பட்டார். ஷீலாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சனம் செய்தார். பின்னர் பாஜகவையும் கண்டிக்கத் துவங்கினார். இதனால், அவர் டெல்லி தேர்தலில் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என்ற குழப்பம் நீடித்தது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு புள்ளி விவரம் கூறுகையில், 'டெல்லியில், கிழக்கு, மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வலுவாக இருந்த காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி தட்டிப் பறித்துள்ளது. புதிதாக ஓட்டுரிமை பெற்ற சுமார் 4.6 லட்சம் மற்றும் நடுத்தர வாக்காளர்களில் பலரும் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். இதனால், அது முதன் முறையாக போட்டியிட்டு மொத்தம் 31 சதவிகிதம் வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது' எனக் கூறுகிறது.

இக்கட்சி தன் பிரச்சாரங்களின் போது ஆங்காங்கே சிறு சிறு கூட்டங்களை மட்டும் நடத்தியது தவிர, பெரிய அளவிலான பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட நடத்தவில்லை. 'துடைப்பம்' சின்னத்தை உயர்த்தி வெற்றியைக் கொண்டாடும் ஆம் ஆத்மி கட்சியினர்.

ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டமன்றத் தேர்தல், அரவிந்த் கெஜ்ரிவால்

SCROLL FOR NEXT