குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உயிருக்கு பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு கவலை தெரிவித்தார். இது குறித்து ஹைதரபாத்தில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறும்போது, மோடியைக் கொல்லும் முயற்சியில் நாட்டில் உள்ள சில கட்சிகள் மறைமுக ஆதரவு கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பலம் வாய்ந்த தலைவராக மோடி உருவெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சதி நடப்பதாகவும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, பாட்னாவில் அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார். தீவிரவாதிகளுக்கு அண்டை நாட்டில் இருந்து ஊக்கம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் நமது நாட்டில் உள்ள ஒரு சில கட்சிகளிடம் இருந்தும் இந்த தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு கிடைப்பதாகத் தெரிவித்தார். மோடி பிரதரானால் தங்களது நிலை மோசமாகும் எனத் தீவிரவாதிகளுக்கு நன்றாகவே தெரியும் என்பதால்தான் அவருக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் குறிவைத்தாக வெங்கையா நாயுடு கூறினார். மேலும், மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் தெரிந்தும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். நரேந்திர மோடிக்கான அச்சுறுத்தல் விஷயத்தில் சர்வதேச சதி இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கவலை தெரிவித்தார்.