இந்தியா

உத்தவ் தாக்கரே - ஹர்திக் படேல் சந்திப்பு

செய்திப்பிரிவு

பத்தாண்டுகளாக நீடித்து வந்த சிவசேனா- பாஜக கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், படேல் சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரிப் போராடிய ஹர்திக் படேல், உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசியுள்ளார்.

மும்பையில் உள்ள தாக்கரேவின் வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் ஹர்திக் படேல், சிவசேனாவுடன் இணைவதற்காக அச்சாரமாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் ஹர்திக் படேல். 2015 ஜூலையில் தொடங்கிய போராட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது.

அதைத் தொடர்ந்து 9 மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அப்போதே தீவிர முயற்சி மேற்கொண்டன. ஆளும் பாஜக.வை தோற்கடிக்க ஹர்திக் படேல் சமூகத்தவரின் ஆதரவு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குஜராத்தில் படேல் சமூகத்தவரின் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. இந்த சமூகத்தினர் பாஜக.வுக்கு ஆதரவாக இருந்தனர். இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக அவர்கள் ஹர்திக் படேலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது ஹர்திக் - உத்தவ் தாக்கரே சந்திப்பு குறித்து, சிவசேனா கட்சியின் இளைஞர் அணித்தலைவர் ஆதித்யா தாக்கரே தன் ட்விட்டர் பக்கத்தில், ''சிவசேனா பிரமுகர் ஸ்ரீ பாலாசாகேப் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தவே ஹர்திக் வந்தார்'' என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்கரே, ''குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவின் முகமாக ஹர்திக் இருப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனா நாளிதழான சாம்னா, பிரதமர் நரேந்திர மோடியைக் காட்டிலும் ஹர்திக் படேல் மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறார் என்று தன் தலையங்களில் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT