மத்திய அரசு, ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுன் இணைத்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதானது, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ள தன்னிச்சையான நடவடிக்கையாகும். ரயில்வே நிதி மற்றும் வளர்ச்சி குறித்து விவாதித்திட நாடாளுமன்றத்திற்குத்தான் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தனி ரயில்வே பட்ஜெட் ஒழிப்பு என்பது உண்மையில் அரசு கூறும் காரணங்களுக்கானது அல்ல. இந்திய ரயில்வேயை வணிகமயம் மற்றும் தனியார்மயமாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே ஆகும்.
இந்திய ரயில்வே என்பது, பல லட்சக்கணக்கான சாமானிய மக்களுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வரக்கூடிய நாட்டில் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமாகும். இத்தகைய பொதுப் போக்குவரத்து சேவை முழுவதும் வணிகரீதியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கும், அதன் நிதிகள், செலவினங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் மீது விவாதங்கள் நடத்தி ஏற்பளிப்பு செய்யப்படுவதற்கும் வாய்ப்பு அளித்தது. இப்போது அதனை ஒழித்துக்கட்டி இருப்பதன் மூலம் அந்த வாய்ப்பு வெட்டி எறியப்பட்டிருக்கிறது.
இந்திய ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டுடன் இணைப்பதற்கான நடவடிக்கை என்பது இந்திய ரயில்வேயை வணிக மயம் மற்றும் தனியார்மயமாக்குவதற்காக விவேக் தேவ்ராய் குழு அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்திருப்பதன் மூலம், சாமானிய மக்களுக்கான வசதிகள் மேலும் மோசமாகும்; வசதி படைத்தோருக்கான வசதிகள் மேலும் அதிகமாகும் வசதி படைத்தோருக்கும் வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகும். ரயில் கட்டணங்கள் கடுமையாக உயரும் என்கிற எச்சரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியிருக்கிறது.