ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை மறக்கவே முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இஸ்லாமிய மக்கள் அனை வருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இதுபோன்ற பண்டிகையின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் நாம் உத்வேகம் பெற வேண்டும்.
ஜெகந்நாதர் ரத யாத்திரை நாட்டின் பல மாநிலங்களில் நடை பெறுகிறது. இதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முபாரக்பூர் கிராமத்தில் கழிவறை கட்டுவதற்காக அரசு ரூ.17 லட்சம் ஒதுக்கியது. ஆனால் தங்கள் சொந்த செலவில் கட்டிக் கொள்வதாகக் கூறிய அவர்கள் இந்த நிதியை வேறு வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். ரம்ஜான் தினத்தில் அவர்களைப் பாராட்டுகிறேன்.
சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவை என ஏற்கெனவே அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த பட்டியலில் உத்தராகண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களும் இணைந்துள்ளன. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசு மற்றும் பொதுமக்களுக்கு நன்றி.
சமீபத்தில் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது பாராட்டத் தக்கது. இஸ்ரோ சமீபத்தில் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்தேன். அப்போது மகாத்மா காந்தி திருமண பரிசாக வழங்கிய கையால் நெய்யப்பட்ட கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அது வியப்பாக இருந்தது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் காதி கைக்குட்டைகளை நாமும் பரிசளிப்போம்.
கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 25) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நம் நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இது ஜனநாயகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அடல் பிஹாரி வாஜ்பாயும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவசரநிலை அமலில் இருந்த போது நீதித் துறையும் கடுமை யாக பாதித்தது. இதுபோல ஊடகத் துறையின் சுதந்திரமும் பறி போனது. அந்த கறுப்பு தினத்தின் நினைவு நாளான இன்று, அப்போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்வது மிகவும் அவசியம் ஆகும்.
அதேநேரம் ஜனநாயத்தை நேசித்தவர்கள் அவசரநிலையை எதிர்த்து நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்காக ஒரு பெரிய இயக்கமே உருவானது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்குள் அவசரநிலையை இந்திரா காந்தி விலக்கிக் கொண்டார். எனினும், அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்திக்கு தக்க பாடம் புகட்டினார்கள்.
இந்த கறுப்பு நாளை ஜனநாயகவாதிகளால் மறக்கவே முடியாது. ஜனநாயகம் என்பது ஒரு நடைமுறை மட்டும் அல்ல. அது நம்முடைய கலாச்சாரம். அதை வலுப் படுத்த வேண்டியது நமது கடமை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
சமீப காலமாக விளையாட்டுத் துறையில் மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. இதற்கு பெற்றோரும் தடையாக இருந்து வருகின்றனர். அதேநேரம் இளைய தலைமுறையினருக்கு படிப்புடன் விளையாட்டுக்கும் சிறந்த எதிர்காலம் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. நமது விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடிதம் எழுதி உள்ளார். அதில், அரசின் இணைய சந்தையின் மூலம் பொருட்களை விற்பதாகவும், இதன் மூலம் பிரதமர் அலுவலகம் கூட 2 பொருட்களை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதான் பெண்களுக்கான அதிகாரமளித்தல். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.