ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் சுமுக தீர்வு எட்டப்படும் என மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவு அவசரச் சட்டத்தை உள்துறையில் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். தமிழக பாரம்பரியத்தைக் காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும். எந்த ஒரு விஷயமும் மிக நேர்த்தியாக, ஆக்கபூர்வமாக, முழுமனதோடு நிறைவேற்றப்பட வேண்டும். அரை மனதுடன் எதையும் செய்யக்கூடாது. ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு எட்டப்படும்" எனத் தெரிவித்தார்.