இந்தியா

சசிகலா உள்ளிட்டோர் மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

இரா.வினோத்

காலை 10.35 மணிக்கு முடிவு தெரியும் | யாரும் நேரில் ஆஜராக தேவையில்லை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேகமாக விசாரித்த நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை ஆராய்ந்து பல்வேறு திருத்தங்களை சுட்டிக்காட்டியது.ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த பதில் மனுக்களையும் ஆராய்ந்து புதிய‌ வழிகாட்டல்களை வழங்கியது. மேல்முறையீட்டு வழக்கின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

அப்போது கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஆச்சார்யா ஆகியோர், ‘‘18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என அறிவித்து கடுமையான தண்டனை அளித்தார். இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு, கூட்டுச் சதி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை ஆதாரத்துடன் தீர்ப்பில் நிரூபித்துள்ளார்.

ஆனால் நீதிபதி குமாரசாமி எவ்வித ஆதாரங்களையும் சான்றுகளையும் மேற்கோள் காட்டாமல் நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பில் அடிப்படை கணித பிழைகளும், சட்ட முரண்களும் நிறைந்திருக்கின்றன. எனவே நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் முடிவை அறிவிக்க வேண்டும்'' என இறுதிவாதம் செய்தன‌ர்.

இதற்கு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோர் தரப்பில், ‘‘இவ்வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப் பட்டுள்ளது. நீதிபதி குமாரசாமி தேவை யான ஆவணங்களையும், சான்றுகளை யும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பை வழங்கினார். எனவே கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிட்டனர். 6 மாதங்களுக்கு மேலாக அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கடந்த ஜூன் 7-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

நீதிமன்ற அறை எண் 6-ல் தீர்ப்பு

கடந்த வாரம் கர்நாடக அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நினைவூட்டினார். இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ், ‘‘ஏறக்குறைய தீர்ப்பு எழுதும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப் படும்'' என்றார். இதனால் தமிழக அரசியலில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத் துக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே நிலவும் மோதலால் தீர்ப்பின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிமன்ற அறை எண் 6-ல் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை முதல் வழக்காக எடுத்துக்கொண்டு தீர்ப்பை அறிவிக்கிறது'' என தெரிவித்துள்ளது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை.

கடந்த 21 ஆண்டுகளாக நீளும் இவ்வழக்கின் தீர்ப்பு அநேகமாக காலை 10.30 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் அடுத்த 5 நிமிடத்துக்குள் வெளியாகிவிடும். நீதிபதிகள் தீர்ப்பின் அனைத்து பக்கங்களையும் வாசிக் காமல், தீர்ப்பின் இறுதிப் பகுதியை மட்டும் சுமார் 3 நிமிடங்கள் வரை வாசிப்பார்கள். இதைத் தொடர்ந்து தீர்ப்பு குறித்து முழுமையான விவரங்கள் மனுதாரர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT