9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் இந்திய கடற்படையுடன் சனிக்கிழமை சேர்க்கப்பட உள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு, 974 மில்லியன் டாலர் செலவில் ரஷ்யாவிடம் இருந்து இந்த போர்க்கப்பலை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஆனால் போர்க்கப்பலை இந்தியாவுக்கு வழங்குவதில் ரஷ்யா தொடர்ந்து இழுபறி செய்து வந்தது.
இழுபறி ஏன்?
கப்பல் கட்டும் பணியும் தாமதமாகவே நடந்து வந்தது. இதனால் கப்பல் கட்டுவதற்கான செலவும் அதிகரித்தது. இதுதொடர்பாக, இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், இந்தக் கப்பல் கட்டும் பணி 9 ஆண்டுகள் தாமதமாக சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தக் கப்பல் இந்திய கடற்படையுடன் நாளை (சனிக்கிழமை) இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட உள்ளது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா சிறப்பு:
இந்தக் கப்பலின் மொத்த எடை 40,000 டன்கள். இந்த போர்க்கப்பல் 60 மீட்டர் உயரமானது. ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மிக்-29 ரக விமானங்களையும், 10 ஹெலிகாப்டர்களையும் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது இந்தக் கப்பல்.
போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கப்பலால், நாள் ஒன்றுக்கு 13,000 கடல் மைல்கள் பயணம் செய்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியும்.
அந்தோணி ரஷ்யா பயணம்:
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படுவதை ஒட்டி பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இன்று இரவு ரஷ்யா செல்கிறார். நிகழ்ச்சி, ரஷ்யாவின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் மையம் உள்ள சேவ்மாஷ் கப்பல் கட்டமைப்புத் தளத்தில் நடைபெறுகிறது.