குஜராத்தில் பள்ளிப்பைகளில் முன்னாள் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் பாஜக குஜராத் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடி கிராமமான சங்கேதாவில் ‘ஷாலா பிரவேஷ் உத்சவ்’ நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஸீலா பஞ்சாயத்து அளித்த பைகளில் அகிலேஷ் யாதவ் படம் இருந்தது.
அதாவது பஞ்சாயத்து லோகோதான் பைகளில் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால் அதைப்பிய்த்து எடுத்துப் பார்த்தால் அகிலேஷ் யாதவ் படம் அச்சிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி.யும் அகிலேசுக்கு நெருங்கியவருமான சுனில் சிங் சாஜன் கூறும்போது, “இது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் வெட்கங்கெட்ட தனத்தையே காண்பிக்கிறது. குஜராத் அரசுக்கும்தான். அகிலேஷ் படம் உள்ள பள்ளிப்பைகள் எப்படி குஜராத்தில் விநியோகிக்கப்பட்டது? உ.பி.பள்ளிகளுக்கான பைகளை திருடினால்தான் இது சாத்தியம். சாமியார் என்ற பெயரில் ஆதித்யநாத் ஒரு களங்கம். உ.பி. அரசு இந்தப் பைகள் எப்படி குஜராத் சென்றது என்பதை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இந்தப் பைகள் சூரத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குஜராத்துக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று குஜராஜ் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சியிலிருந்த போது பள்ளி மாணவர்களுக்கு 1.8 கோடி பைகளை அளிப்பதாக அறிவித்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த நடைமுறை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
யோகி ஆதித்ய நாத் அரசு அகிலேஷ் படத்துடனேயே பைகளை அளிக்க அனுமதித்துள்ளார், இதற்குக் காரணமாக அவர் மக்கள் பணத்தை விரயம் செய்வதற்கு எதிரானவர் என்று கூறப்பட்டது.