இந்தியா

காஷ்மீர் பிரச்சினை முறையாக கையாளப்படவில்லை: மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

பிடிஐ

காஷ்மீர் பிரச்சினையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜனார்தன் துவிவேதி மற்றும் இதர செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் இப்போதைய அரசியல் நிலவரம், குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது, காஷ்மீர் பிரச்சினை, இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கான மத்திய அரசின் தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, “காஷ்மீரில் முன்பு அமைதி நிலவியது. ஆனால் சமீப காலமாக வன்முறையும் போராட்டமும் அதிகரித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சினையை மத்திய அரசு முறையாக கையாளவில்லை. அங்குள்ள சூழல் மத்திய அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாக உள்ளது. மாநில அரசும் இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டது.

கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மாற்றுக் கருத்து உடையவர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டின் தனித்துவம் மற்றும் அடையாளத்தை மத்திய அரசு அழிக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சியை முறியடித்து நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, “மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. குறிப்பாக தனியார் துறை முதலீடு சீர்குலைந் துள்ளது. அரசின் செலவினம் என்ற ஒற்றை இன்ஜின் முலம் பொருளாதாரம் இயங்குகிறது.

இதன் காரணமாக வேலை வாய்ப்பு உருவாக்கம் குறைந்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாகி வருகிறது. அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கும் கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்” என்றார்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “ராகுலை கட்சித் தலைவராக்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக் கப்படவில்லை. எனினும், கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது” என்றார்.

இதன்படி, சுமார் 2000 மூத்த தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் வரும் அக்டோபர் 15-ம் தேதி கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பர். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களையும் இவர்கள் தேர்ந்தெடுப்பர் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT