பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு எதிராக முஸாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா தாக்கல் செய்த மனுவை, தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். 'ஹாக்கி விளையாட்டு வீரர் தயான்சந்துக்கு உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்காமல், சச்சின் டெண்டுல்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், நாட்டு மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே, விளையாட்டுத்துறை அமைச்சர் பனஅவார் ஜிதேந்திர சிங், விளையாட்டுத்துறை அமைச்சக செயலர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சச்சின் டெண்டுல்கரும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது, ஐபிசி 420 (ஏமாற்றுதல் சார்ந்த குற்றங்கள்), 417 (ஆள்மாறாட்டத்தின் மூலம் ஏமாற்றுதல்), 417 (ஏமாற்றுவதற்கான தண்டனை), 504 (திட்டமிட்டு அவமதித்தல் மற்றும் அமைதியைக் குலைத்தல்), 120 பி (குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சிவானந்த் திவாரியை மனுதாரர் சாட்சியாகச் சேர்த்துள்ளார். வழக்கு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.