இந்தியா

பாலியல் பலாத்காரம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ஆர்.ஆர்.பாட்டீல்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின், சாங்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் பாலியல் பலாத்காரம் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசும்போது, “இத்தொகுதியில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் போட்டியிடும் சுதாகர் கடேவின் ஆதரவாளர்கள் என்னிடம் வந்து தங்கள் ஆதரவை எனக்கு அளித்தனர்.

ஏன் என்று கேட்டபோது, அவர்களது கட்சி வேட்பாளர் பாலியல் பலாத்கார வழக்கில் சிறை சென்றுள்ளதாக தெரிவித்தனர். சுதாகர் கடே எம்.எல்.ஏ. ஆக விரும்பினால் தேர்தல் முடிந்த பிறகு பலாத்காரத்தில் ஈடுபடவேண்டியதுதானே” என்று பேசியுள்ளார்.

இதனையடுத்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பாட்டீலின் இந்தப் பேச்சு பெண்கள் சமுதாயத்தினை இழிவு படுத்துவதாக உள்ளது என்று கடும் கண்டனங்களை எழுப்பினர்.

இதனையடுத்து மன்னிப்பு கோரிய பாட்டீல், “நான் அந்த வேட்பாளரை விமர்சனம் செய்யவே இப்படி கூறினேன், பெண்களை இழிவு படுத்துவதற்காக அல்ல. எனினும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.

SCROLL FOR NEXT