இந்தியா

பலாத்காரர் கொலை: எத்தகையது நாகாலாந்து மக்கள் செயல்?

க.பத்மப்ரியா

வங்கதேசத்தவரான பரீத் கான் முறைகேடான முறையில் நாகாலாந்துக்குள் ஊடுருவி தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் பிப்ரவரி 23-ம் தேதி திமாப்பூரில் நாகா பழங்குடியினப் பெண்ணை பாலியல் வல்லுறுவுக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டுப்பட்டு மத்திய சிறையில் காவலில் விசாரிக்கப்பட்டு வந்தார்.

பழங்குடியினப் பெண் வல்லுறுவு செய்யப்பட்டது குறித்து கொதித்தெழுந்த நாகா மக்கள், கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒரு முஸ்லிம் மற்றும் அவர் வங்கதேசத்திலிருந்து ஊடுருவி வந்தவர் என்ற காரணங்களை வைத்து, ஏற்கெனவே சிறைத் துறையினருக்கு நாகாலாந்து உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் மார்ச் 5-ஆம் தேதி திமாப்பூரில் போராட்டம் நடத்த 4000-த்துக்கும் அதிகமான மக்கள் கூடினர்.

இவர்களில் பெரும்பாலானோர் நாகா மாணவர்கள் கூட்டமைப்பையும் ஹோஹோ நாகா பெண்கள் கூட்டமைப்பையும் சேர்ந்தவர்கள். வடகிழக்கில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் இவர்கள்.

பொதுமக்கள் போராட்டத்தின்போது வாகன எரிப்பிலும் கடைகளை உடைப்பதிலும் ஈடுப்பட்டிருந்த போது, மாணவர் கூட்டம் சிறையில் நுழைய முற்பட்டது. அதிகாரிகளை தாக்கி உள்ளே சென்று கைதியை வெளிகொண்டு வந்து, திமாப்பூர் சாலைகளில் இழுத்துச் சென்றனர். ஏற்கெனவே உஷார் படுத்தப்பட்ட நிலையில் ஆயுதங்களுடன் இருந்த போதிலும் அதிகாரிகள் மாணவர்கள் மீது ஒருகட்டம்வரை தாக்குதல் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் சிறைக்குள் நுழைந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், அவர்கள் சீருடையில் இருந்ததாகவும் நாகாலாந்து உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், 4,000-த்தும் அதிகமானோரை போலீஸாரால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

சாலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த கைதியின் உடைகள் அகற்றப்பட்டு, நிர்வாண நிலையில் சாலையில் அடித்தே கொல்லப்பட்டார். திமாப்பூரில் உள்ள மணி கூண்டில் கைதியை மாட்டி நாகாவாசிகள் படமெடுத்தனர்.

நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமாகவும் வங்கதேசத்தவர்கள் இருக்கும் பகுதிகள் நிறைந்திருக்கும் அசாம் மாநிலமும் உஷார் நிலையில் உள்ளது. இங்கு நாகா மக்களுக்கு எதிராக சில இயக்கங்கள் போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாகாலாந்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக இணைய உலகம் கொந்தளித்து வருகிறது. இனப் பிரச்சினையாக மாறி இருக்கும் இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, தாக்குதல் நடத்திய நாகா மக்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ட்விட்டரில் பலமுனைக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Nagaland என்ற ஹேஷ்டேகில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற கருத்துக்களில் சில,

வருண் கோயல் (‏@IndianSages): மிருகங்களுக்கு பாடம் எடுக்கும் நாம், சில நேரங்களில் மிருகமாவே மாறிவிடுகிறோம்.

ஜியா (‏@WallflowerNaz): எவ்வளவு போராடியும் பயனில்லை. பலாத்காரக்காரர்களை விருந்தினர்களாக பாவிக்கும் அரசின் செயல் முடிவுக்கு வரப் போவதில்லை.

பிபூ பிரசாத் (‏@BibhuRoutray): 2013-ல் மட்டும் நாகாலாந்தில் 31 பலாத்காரங்கள் நடந்துள்ளன. ஆனால் உள்ளூர் பலாத்காரர்கள் யாரும் இந்த வகையில் தண்டிக்கப்படவில்லையே?

கிருஷ்ணா (‏@Rao_Krishna): கொலைக் கும்பலின் செயலை சரியான நீதியாக கருதும் பெண்ணியவாதிகள், பெண்கள் ஈடுபடும் குற்றங்களிலும் இதே தண்டனையை எதிர்ப்பார்க்கலாமா? என்று விளக்க வேண்டும்.

ஃப்ரீட ம் ஃபைட்டர்ஸ் (‏@PuliArason): நாகாவாசிகளே, பலாத்காரனை சட்டத்துக்குப் புறம்பாக முறைசாரா வகையில் கொன்றுள்ளீர்களே? இதன் மூலம் உங்கள் பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பலாத்காரமே நடக்காது என்கிறீர்களா?

நிஷ்கா கிருஷ்ணன் (‏@NishkaK): நாகா மக்களின் செயலை போற்றுபவர்கள் கொலைகாரர்கள். ட்விட்டரில் போர்கொடி தூக்குபவர்கள் இன்னும் மோசமானவர்கள்

மீடியா வாட்ச்சர் (‏@India_MSM): அரசு செயல்பட தவறும்போது, பொதுமக்கள் நீதியை நிலை நாட்டுவார்கள்.

நொய்தா பழமைவாசி (‏@noidaveteran): பலாத்கார குற்றவாளி முஸ்லிம் என்பதால் தான், சிறையிலிருந்து இழுத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நாகா பலாத்காரகாரர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படுமா என்ன?

டாக்டர் நீளு கோசுவாமி (‏@NeelakshiGswm): நீங்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வீர்கள். அவளை பாலியல் தொழிலாளி என்பீர்கள். நீதியை மாற்றியமைக்க வழி செய்வீர்கள். படம் எடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தை கேவலப்படுத்துவீர்கள். இதற்கெல்லாம் நாகா மக்கள் செய்தது எவ்வளவோ மேல்.

சாமி (‏@SAMI_hadyh): இதை நிறுத்தியாக வேண்டும். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மை ஏற்படும். இந்தியா எங்கும் உள்ள வடகிழக்குவாசிகள் பாதிக்கப்படுவார்கள்.

அஞ்சான் (‏@anjan): வடகிழக்கு வாசிகளே, இது போல ஒருச் சம்பவம் உங்களுக்கு நேரும்போது, மீடியாவுக்கு முன்னாள் வந்து கத்தி கூச்சலிடாதீர்கள்.

லோன்ரேஞ்சர் (‏@Loneranger9): மிஸ்டர் நரேந்திர மோடி, உங்களது ரசிகர்கள் திமாப்பூர் சம்பவத்தை புகழ்கிறார்கள். நீதி வழங்கப்பட்டிருக்கும் முறையை வரவேற்கிறீர்களா? நாளை சாங்கிகளும் (வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப், பாகிஸ்தானில் வாழும் பழங்குடியின மக்கள்) இதேப் போல நடப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்.

SCROLL FOR NEXT