மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என பிஐபி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என கடந்த சில வாரங்களாகவே சலசலக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிஐபி இயக்குநர் பிராங் நொரோன்ஹா.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது, பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படலாம் என்றும், சட்ட அமைச்சர் சதானந்த கவுடா வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் முதல்வராக சர்பானந்த சோனோவால் பதவியேற்றுக் கொண்டதால் அவர் வகித்து வந்த விளையாட்டு அமைச்சர் பதவியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாமின் ராமன் தேகா, ராமேஸ்வர் சிங் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் மக்களவையின் பாஜக கொறடா அர்ஜூன் ராம் மேக்வால் புதிய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.