அதிகமான வாக்காளர்கள் நோட்டா பயன்படுத்தினால் மறு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த கோரிக்கையை நிராகரித்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.சதாசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நோட்டா தற்போது தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் என்னவிதமான வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதற்குள் நோட்டா நடைமுறைகளில் மாறுதல் கொண்டு வர முடியும் என தெரிவித்தனர்.
வேட்பாளர்களையும் நிராகரிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்யும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் நோட்டா சின்னம் அமைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நோட்டா சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் பிங்க் நிறத்திலும், நாடாளுமன்றத் தேர்தலில் வெள்ளை நிறத்திலும் நோட்டா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சத்தீஸ்கர், மிஸோரம், மத்தியப் பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலிலும் நோட்டா அமல் படுத்தப்பட்டுள்ளது.