நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நாள் முழுவதும் நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆளும் மணிப்பூர், மிசோரம், அசாம், கர்நாடகா, ஆந்திரம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரம், அருணாச்சலப் பிரதேசம், கேரளா, மெகாலயா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களும், காங்கிரஸ் மூத்த அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ஷிண்டே, சிதம்பரம், அகமது படேல் ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கம் உள்ள மாநிலங்கள் கை விட்டுப் போகாமல் தக்க வைத்துக் கொள்ளவும், மற்ற மாநிலங்களில் வெற்றி முகம் காண்பது குறித்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டம், ஊழலுக்கு எதிரான லோக்பால், லோக்ஆயுக்தா சட்டங்களை அமல்படுத்துவது குறித்தும், விலைவாசி உயர்வு மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.