உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கர்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரும் எனக்கு முன்னாள் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை டெல்லி காவல்துறை இயக்குநர் மூலம் நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் அமைதியின் மையில் இருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டின் நலன் கருதியும் அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவு மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482-வது பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கர்ணன் கூறியுள்ளார்.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஆதார் வழக்கில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் கொண்ட அமர்வு முன் நேற்று வாதிட்ட அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறும்போது, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுமாறு நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்கு அவர் கட்டுப்படுவாரா எனத் தெரியவில்லை” என்றார்.
உச்ச நீதிமன்றத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நாளை (மே 4) மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள 7 நீதிபதிகள் அமர்வு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பதிலடியாக இந்த நீதிபதிகள் 7 பேருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்தி 7-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி கர்ணன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.