இந்தியா

ஊழல்களால் மக்கள் நம்பிக்கையை இழந்தது காங்கிரஸ்: அருண் ஜெட்லி

செய்திப்பிரிவு

ஓட்டுக்கு பணம், 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல், விஐபி ஹெலிகாப்டர் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் ஜெட்லி: "2009.ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மத்தியில் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் அடுக்கடுக்காக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது. ஒரு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் தூக்கி எறிந்துவிட்டது.

குஜராத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை தவறாக இருந்ததால் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

தெலங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் இப்போது தான் சாதக நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால் பாஜக ஆரம்பம் முதல் தனித் தெலங்கானாவுக்காக குரல் கொடுத்துவருகிறது.

அதேபோல் ஊழலுக்கு எதிரான ராகுல் காந்தியின் குரலும் கால தாமதமாகவே ஒலிக்கிறது" என்றார்.

மூன்றாவது அணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெட்லி, மூன்றாவது அணி தோல்வியடைந்த சித்தாந்தம் என கூறினார்.

SCROLL FOR NEXT