தெலங்கானா மசோதா முறைப்படி தாக்கல் செய்யப்படவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானா மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதை கடுமையாக கண்டித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தான் அவையில் இருந்தவரையில் மசோதாவை அரசு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பான விவரம் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம்பெறவில்லை. மசோதா முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. மிளகுப் பொடி திரவம் ஸ்பிரே செய்த பிறகும் அவையில் காத்திருந்தேன். அப்போது வரை மசோதா தாக்கல் ஆகவில்லை. அவைக் காவலர்கள் என்னிடம் வந்து, மிளகுப்பொடி திரவத்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறிய பின்புதான் நான் வெளியேறினேன். அதுவரை மசோதாவிலிருந்த ஒரு வார்த்தை கூட வாசிக்கப்படவில்லை. மசோதாவை எப்போது தாக்கல் செய்தார்கள் என்றே தெரியவில்லை.
நடந்தவை அனைத்துமே காங்கிரஸ் கட்சி முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாக கருது கிறேன். கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறியவுடன் மசோதாவை தாக்கல் செய்ய அவர்கள் விரும்பியுள்ளனர்.
மசோதாவை தாக்கல் செய்ய இதுபோன்ற வழிமுறையை மத்திய அரசு கையாளும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல் மத்திய அரசுடன் எந்த விவகாரம் தொடர்பாகவும் பேசுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பாஜக மட்டுமின்றி சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்தன.
பின்னர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சமாஜ்வாதி, இந்திய கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள், அவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்து தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.
நடப்பது நாடகமே
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறுகையில், “நாடாளுமன்றத்தில் வியாழக் கிழமை நிகழ்ந்த சம்பவங்கள் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல வெட்ககரமானதாகும். இதை பார்த்து மிகவும் வருத்தமடைந் தேன். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பு.
இது அக்கட்சி நடத்தி வரும் நாடகத்தின் ஒரு பகுதி. எப்படியாவது மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்காக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் இந்த அரசுக்கு தயக்கமில்லை” என்றார்..
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது: கிரண் குமார்
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறினார்.
இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா, ஆந்திர சட்டசபையில் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், அதில் சில மாற்றங்களை செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒருவேளை திருத்தம் செய்யாமல் அந்த மசோதாவை தாக்கல் செய்திருந்தால், அது குப்பை தொட்டிக்குத்தான் போயிருக்கும். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது. அதை நினைத்தாலே வேதனை அளிக்கிறது.
இதற்கு ஒரே தீர்வு மாநிலத்தை பிரிக்காமல் இருப்பதுதான் இப்போதுகூட மறுசீரமைப்பு மசோதா நிறைவேறுவதைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவங்களால் இதயம் கனக்கிறது என பிரதமர் கூறி உள்ளார். இங்கு மாநிலத்தை பிரிப்பதால் பல கோடி மக்களின் இதயங்கள் வெடிப்பதை அவர் அறியமாட்டாரா? நான் ராஜினாமா செய்வது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.