பாரத் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ், ‘இந்து’ ராம், ஓவியர் ஏ. ராமச்சந்திரன், இசையமைப்பாளர் மறைந்த வி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
சி.என்.ஆர். ராவுக்கு டி.எஸ்சி (டாக்டர் ஆப் சயின்ஸ்) பட்டமும், ‘இந்து’ ராம் உள்ளிட்ட மற்ற மூவருக்கு டி.லிட் (டாக்டர் ஆப் லெட்டர்ஸ்) பட்டமும் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கிய கேரள ஆளுநர் நிகில் குமார், தத்தமது துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ள நான்கு பேருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து மரியாதை செய்தமைக்காக பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார்.
வேதியியல், நானோ தொழில்நுட்பத் துறை விஞ்ஞானியான சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவுக்கு (சிஎன்ஆர் ராவ்) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்வு இதுவாகும்.
சிஎன்ஆர் ராவ் தன் ஏற்புரையில், “உலகின் பிற பகுதிகளில் வெவ்வேறு துறைகளில் அடையப்படும் வளர்ச்சிகளுக்கு இணையான வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
‘இந்து’ ராம், பேசுகையில், “அதீத வேகத்தில் வளர்ந்து வரும் ஊடகத்துறை சார்ந்த படிப்புகளில் உயர்கல்வி வழங்கும் நிறுவனங் கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். மேலும், ‘தனக்கு அளிக்கப்பட்ட இந்த கவுரவத்தை இந்திய வரலாற்றில் பெரும் பங்காற்றியுள்ள ஊடகத்துறைக்குக் கிடைத்த அங்கீகார மாகக் கருதுவதாக’வும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த இசையமைப்பாளர் தட்சிணா மூர்த்திக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டத்தை அவரின் மனைவி கல்யாணி பெற்றுக் கொண்டார்.